Wednesday, January 27, 2016

ஜெபம் செய்வோம்! Lets Pray!

ஜெபம் செய்வோம் 

பரலோகத்தில் இருக்கின்ற எங்கள் அன்பான பிதாவே, 

நீர் சர்வ வல்லமையுள்ள தேவன்! உம்முடைய குமாரனாகிய இயேசுக் கிறிஸ் துவை எங்களுக்காக தந்தருளினதிற்காக உமக்கு நன்றி! இயேசுக்கிறிஸ்துவு க்கூடாக நீர் அனுப்பின தேற்றரவாளனாகிய பரிசுத்த ஆவியானவருக்காக உமக்கு நன்றி!

கர்த்தராகிய இயேசுக்கிறிஸ்து இப்பூமியில் மனிதனாக வந்து, பரிசுத்தமான வாழ்க்கை வாழ்ந்து, என்னை மீட்பதற்காக பாடுகள் பட்டு தம்முடைய பரிசுத்தமான இரத்தத்தை சிந்தி, சிலுவையிலே எனக்காக மரித்து, பாவத்தை வென்று உயிர்ந்தெழுந்தார் என முற்றிலும் விசுவாசிக்கின்றேன். இன்று நான் ஆண்டவராகிய இயேசுக்கிறிஸ்துவை என் வாழ்வின் சொந்த இரட்சகராக ஏற்றுக்கொள்கின்றேன்! இதுவரைகாலமும் நீர் என்னை நடத்தி வந்த உம்முடைய மிகுந்த இரக்கங்களுக்காக உமக்கு ஸ்தோத்திரம்! 

மற்றவர்களை குறித்திருக்கின்ற கசப்பை என் மனத்தில் இருந்து அகற்றிவிட இன்று நான் தீர்மானிக்கின்றேன்! பிறர் எனக்கு செய்த குற்றங்களை மன்னித்துவிட இன்று நான் தீர்மானம் எடுக்கின்றேன். பரிசுத்த ஆவியானவரே எனக்குத் துணைசெய்யும்!

என்னுடைய பாவ பழக்கங்களை விட்டுவிட இன்று நான் தீர்மானிக்கின்றேன். நான் அறிந்தும் அறியாமலும் செய்த பாவங்களை மன்னித்தருளும்! இன்னும் நான் உணராமல் செய்துவரும் தீய பழக்கங்கள் என்னில் இருக்குமாயின் அவைகளை எனக்கு வெளிப்படுத்தும். பரிசுத்த ஆவியானவரே இவை யாவற்றிலிருந்தும் விடுதலை பெற்று மனம் பரிசுத்தம் அடைய எனக்கு உதவி செய்யும்!

தேவனே, மோட்ச வாழ்க்கைக்கு அவசியமானதை என் வாழ்க்கையிவே முதலாவதாக நான் தேட என்னை வழி நடத்தும். இன்று நான் என்னுடைய தேவைகளை உம்முடைய பாதத்தில் வைக்கின்றேன், என் இக்கட்டான சூழ்நிலையிலிருந்து என்னை பூரணமாக விடுவித்து தேவ சமாதானம் என் உள்ளத்தை ஆழ கிருபை செய்தருளும். 

கர்த்தாவே நீர் என்னுடைய ஜெபத்தைக் கேட்டு அதற்கு பதில் தருகின்ற ஜீவனுள்ள தேவன் என்று நான் முற்றிலும் விசுவாசிக்கின்றேன்! உம்மை உண்மையாய் தேடுகிற யாவருக்கும் சமீபமாகவுள்ள கர்த்தர் நீர்! பலமுள்ளவனுக்காகிலும் பலனற்றவனுக்காகிலும் உதவி செய்வது உமக்கு லேசான காரியம்! 
எனக்காக மரித்து உயிர்த்த கர்த்தராகிய இயேசுக்கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபம் கேட்கிறேன் நல்ல பிதாவே, ஆமென்!


உள்ளான மனிதன் சஞ்சிகை 
GRACE TABERNACLE APOSTOLIC CHURCH






No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.